தனிநீதிபதி உத்தரவு ரத்து: ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும்- உயர்நீதிமன்றம் அதிரடி
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தலைமையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஈபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக அவர்கள் தீர்ப்பு கூறினார்கள்.
இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம்" என்று தெரிவித்தனர்.
சென்னையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஏற்கனவே தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை செல்லாது என்று தற்போது இரு அமர்வு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர். இதனால் தற்போது அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.