தமிழ்நாடு (Tamil Nadu)

கல்வி நிலையங்கள் பஸ்களை பாதுகாப்பாக இயக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அரசுக்கு வாசன் கோரிக்கை

Published On 2024-06-13 06:10 GMT   |   Update On 2024-06-13 06:10 GMT
  • போக்குவரத்தில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • வாகன ஓட்டுநர்களிடமும், பொதுமக்களிடமும் போக்குவரத்தில் கவனமுடன் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு பஸ்களாலும், தனியார் பஸ்களாலும் அவ்வப்போது விபத்துகள் நடைபெற்று உயிரிழப்புகள், படுகாயமடைதல் ஏற்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. குறிப்பாக அரசுப்பஸ்சில் மக்கள் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பஸ்சை இயக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசு பஸ்களில் உள்ள குறைகள் சரிசெய்யப்படாததால் தான் விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மிக முக்கியமாக போக்குவரத்தில் உள்ள விதிமுறைகளை அரசுப் பஸ், தனியார் பஸ், கல்வி நிலையங்களுக்கான பஸ் என அனைத்து வகையான பஸ் ஓட்டுநர்களும் முறையாக, சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் அனைத்து வகையான பஸ்களும் இயக்கப்படும் பாதைகளில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்தில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டுநர்களிடமும், பொதுமக்களிடமும் போக்குவரத்தில் கவனமுடன் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News