தமிழ்நாடு

நமது நாடு உலக அளவில் புதிய அவதாரம் எடுத்துள்ளது- கவர்னர் ஆர்.என். ரவி

Published On 2024-01-29 06:06 GMT   |   Update On 2024-01-29 06:07 GMT
  • பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம்.
  • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது.

நாகப்பட்டினம்:

தமிழ் சேவா சங்கம் சார்பில் தமிழர் திருவிழா, கிராமப்புற பொருளாதார மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடு வழங்குதல் மற்றும் மீனவர் மேம்பாட்டு திட்டம் வழங்கும் விழா நாகை பொரவாச்சேரியில் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு முதல்கட்டமாக 25 பேருக்கு வீட்டிற்கான சாவி, 250 பேருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-


தமிழ் சேவா சங்கம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மகளிருக்கு தையல் எந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த பணிகள் தொடர வேண்டும்.

நான் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களுடைய ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலைமாற வேண்டும்.

நமது நாடு உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இங்கு இருக்கக்கூடிய ஏழ்மை நிலையை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. கீழவெண்மணி கிராமத்திற்கு சென்று அங்கு தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன்.


நமது நாடு உலக அளவில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. புதிய கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரையும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணிக்கின்றோம்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அதன் நோக்கம். மத்தியில் உள்ள தலைமை இதை நோக்கிய வீரநடை போட்டு வருகிறது. இந்த புதிய பாரத அவதாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர்.

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்குள்ள பூர்வகுடி மக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமாக உள்ளது. அப்படிப்பட்ட பங்களிப்புடன், இருந்தால் நமது நாட்டை 25 ஆண்டுகளில் நாம் முன்னேறிய நாடாக மாற்றிவிடலாம்.


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை நம் நாட்டின் முன்னேற்றத்தின் சிற்பிகளாக உருவாக்கும் பணியை ஸ்ரீதர் வேம்பு திறமையாக செய்து வருகிறார். அரசியலால் நாம் பிரச்சினைகளையும், பிரிவைவும் மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளங்கள், அமைப்புகள் மூலம் தான் நமது நாட்டை முன்னேற்ற முடியும். அந்த சேவையை தமிழ் சேவா சங்கம் திறமையாக செய்து வருகிறது. இளைஞர்களின் புதிய கனவுகளுடன் புதிய தமிழ்நாட்டை படைப்போம்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.

Tags:    

Similar News