தொடர் விடுமுறையால் ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள்
- ராமேசுவரத்தில் தனியார் பேருந்து இல்லாத நிலையில் அனைத்து பயணிகளும் அரசு பேருந்தில் மட்டுமே திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
- பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
இதில் பெரும்பாலான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரசு பேருந்தில் வந்திருந்தார்கள். ராமேசுவரத்தில் தனியார் பேருந்து இல்லாத நிலையில் அனைத்து பயணிகளும் அரசு பேருந்தில் மட்டுமே திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இரவு நேரத்தில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்ல போதிய பேருந்து இயக்கப்படாத நிலையில் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர். ராமேசுவரத்திற்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் அரசு பேருந்தில் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் நிலையில் பயணிகள் வருகைக்கு ஏற்றவாறு பேருந்துக்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் புறப்பட்டு சென்றனர்.