தமிழ்நாடு

ராமேசுவரத்தில் விடிய, விடிய கனமழை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Published On 2024-01-10 05:48 GMT   |   Update On 2024-01-10 05:48 GMT
  • ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர்.
  • தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்ய தொடங்கியது. இதில், ராமேசுவரத்தில் மட்டும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது.

நகராட்சி அலுவலகம் அருகே முனியசாமி கோவில் தெரு, நகராட்சி பொது மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சிரமத்துடன் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் இன்று வங்க கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும். மேலும் புதன்கிழமை கன மழை பெய்யக்கூடும் என வானிமை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதனைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுங்களில் பாதுகாப்புடன் படகுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கடலாடி 41, வாலி நோக்கம் 53 , கமுதி 53, பல்ல மோர்குளம் 12.20, முதுகுளத்தூர் 25.10, பரமக்குடி 28.30, ஆர்,எஸ்.மங்கலம் 21.40, மண்டபம் 45.60, ராமநாதபுரம் 88, பாம்பன் 63.90, ராமேசுவரம் 68.00, தங்கச்சிமடம் 91.00, தீர்த்ததாண்டதானம் 15.90, திருவாடானை 10.20, தொண்டி 14.60, வட்டாணம் 15.20 பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News