கீழ்வேளூர் கோவில் திருவிழாவில் நாதஸ்வர இசைக்கு ஏற்ப தவில் அடித்து சிறுவன் அசத்தல்
- சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
- சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சாய் வெங்கடேஷ் (வயது 6). இவர் கீழ்வேளூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், வெங்கடேஷ் பள்ளி விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் தந்தை பாலசுந்தரத்துடன் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று நாதஸ்வரம் வாசிப்பதை கவனித்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல வெங்கடேசுக்கும் இசை மீது அதீத பற்று வந்துள்ளது. இதனால் அவ்வப்போது தவில் அடித்து பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறுவன் வெங்கடேஷ் நாதஸ்வர இசைக்கு ஏற்றார் போல் தவில் அடித்து அசத்தி உள்ளார். இது கோவிலில் இருந்த பக்தர்களையும், பொதுமக்களையும் வெகுவாய் கவர்ந்தது.
சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை கண்ட பலரும் சிறுவனை பாராட்டு வருகின்றனர்.