தமிழ்நாடு

கோடை மழையால் உற்சாகம்- சுற்றுலா பயணிகளால் குலுங்கிய கொடைக்கானல்

Published On 2023-05-21 04:09 GMT   |   Update On 2023-05-21 04:09 GMT
  • மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
  • காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தாலும் மாலையில் திடீரென சூறாவளிக்காற்று, இடி மின்னல்களுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கொடைக்கானல் அப்சர்வேட்டரி, செண்பகனூர், நாயுடுபுரம், பெருமாள்மலை, வில்பட்டி, வட்டகானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், தூண்பாறை, மோயர்பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

எனினும் சாரல் மழையில் நனைந்தபடியே உற்சாகமாக சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி உள்ளிட்ட இடங்களில் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பிரையண்ட் பூங்காவில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த பூக்களின் குடும்ப வகைகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது. எனவே இதற்கு நிரந்தர நீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News