தமிழ்நாடு

மதுரை அ.தி.மு.க. மாநாடு: ஆட்சி மாற்றத்தின் கால்கோள் விழாவாக அமையும்- உதயகுமார் பேச்சு

Published On 2023-07-30 10:55 GMT   |   Update On 2023-07-30 10:55 GMT
  • மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது.
  • இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது.

நெல்லை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் விதமாக அ.தி.மு.க. மூத்த தலைமை நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாநில இளைஞர் பாசறை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன், அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரையாற்றினர்.

ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது. மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர்.

நீதிமன்றம் கூட எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என உறுதி செய்து தீர்ப்பு தந்தது. அதனை ஏற்க முடியாது என சொல்லி கொண்டிருக்கின்றனர். தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பிவிடலாம் தூங்கு வதை போல சிலர் நடித்து கொண்டிருக்கின்றனர் அவர்களை எப்படி எழுப்புவது. அவர்களை தேடி கொண்டிருக்கிறோம்.ஆட்சி மாற்றத்தின் கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-

அ.தி.மு.க.வின் போதிதர்மனாக எம்.ஜி.ஆர் இருந்தபோது 17 லட்சம் பேர் தொண்டர்களாக இருந்தனர். அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1½ கோடி தொண்டர்களாக உயர்ந்தனர். தற்போது எடப்பாடியார் காலத்தில் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. உலக அளவில் 7-வது பெரிய கட்சியாக ஏழாவது அதிசயமாக அ.தி.மு.க. இயக்கம் இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News