தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- முத்துசாமி பேட்டி
- கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள்.
- சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுடன் முதல்வர் திட்டம் அரசியல் நோக்கமோ அல்லது விளம்பரம் நோக்கத்திற்காகவோ செய்யவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கை மனு மீதான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் மது அருந்தும் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் மது அருந்துவதால் நிகழும் குற்ற சம்பவங்கள் குறித்து அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.
தனிப்பட்ட முறையில் நிகழும் குற்ற சம்பவத்தில் போலீசார் விசாரணையில் தான் தெரியும் வரும். மது அருந்த வருபவர்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை. தவறான வழியில் சென்று தவறு நிகழக்கூடாது என்பதை சரி பார்ப்பதற்கான முயற்சியாக தான் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
மது விற்பனை அதிகப்படுத்தும் நோக்கம் இல்லை. அதிலிருந்து மது அருந்துபவர்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கில் அரசின் சார்பில் போதுமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள். ஒரே நாளில் கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது.
அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து தெளிவான புகார் வந்தால் பணியாளர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க அரசு தயாராக உள்ளது.
25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிலையில் சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள். 99 சதவீதம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.