தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சி தான் இந்து சமய அறநிலையத்துறைக்கு பொற்காலம்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2024-09-08 09:38 GMT   |   Update On 2024-09-08 09:38 GMT
  • ரூ.136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.
  • திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலுடன் இணைந்த மானூா் அம்பலவாண சுவாமி கோவிலில் இன்று அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் 2021-22-ம் ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோவில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோவில்களில் குடமுழுக்கு நடத்த ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து 2023-2024, 2024-2025 என 3 ஆண்டுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் ரூ. 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று வரை நெல்லை மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோவில்களில் கும்பாபிஷேகம் இதுவரை நடந்துள்ளது. இன்று மட்டும் 55 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 250 கோவில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் திருத்தேர் பராமரிப்பு, தேர் கூடம் அமைத்தல், தெப்பக்குளம் பராமரித்தல் என நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது.

மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு சொந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்கு விடப்பட்டு அந்த தொகை கோவிலின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 கோவில்களுக்கும், நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 கோவில்களுக்கும் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

805 கோவில்களுக்கு சொந்தமான ரூ. 6 ஆயிரத்து 703 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் தி.மு.க. ஆட்சியில் தான் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் கோவிலின் பெயர்கள் இடம் பெறும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் ரூ.92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ.59 கோடி செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.11.93 கோடி செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

ரூ.28 கோடியே 44 லட்சம் செலவில் 172 கோவில்களில் மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.

இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். 9 வெள்ளித் தேர் சுமார் ரூ.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.120.33 கோடி செலவில் 220 குளங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது.

ரூ.321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.

ரூ.1530 கோடி செலவில் 19 கோவில்களில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருச்செந்தூர், பழனி உட்பட கோவில்களில் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து இவ்வாறு திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி.

திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு இந்து சமய அறநிலைத்துறை எவ்வித இடைஞ்சலும் கொடுக்கவில்லை.

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் அதற்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலில் உள்ள வெள்ளித்தேர் மற்றும் உள்தெப்பம் அருகே கட்டப்பட்டு வரும் ஆராட்டு மண்டபத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே ரத வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நெல்லையப்பர், காந்திமதியம்மன் உள்ளிட்ட 5 தேர்களை அவர் ஆய்வு செய்தார்.

5 தேர்களையும் மழைக்காலத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிமெண்ட் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News