நாமக்கல்லில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி மாட்டு வியாபாரி பலி
- நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி அடுத்த குமாரகவுண்டனூரை சேர்ந்தவர் முனியன் மகன் வரதராஜ் (வயது 72).
மாட்டு வியாபாரியான இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொம்மைகுட்டை மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் வரதராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் வரதராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜேடர்பாளையம் மணல்மேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மைதீஸ்வரன் (21). கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்த முருகானந்தன் மகன் சுரேந்திரன் (23) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல்-பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வள்ளிபுரம் மேம்பாலம் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மைதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரேந்திரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் அவர் மேல்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.