தமிழ்நாடு

தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தில் காயம் அடைந்த வடமாநில வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

Published On 2023-05-17 04:31 GMT   |   Update On 2023-05-17 11:42 GMT
  • ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
  • ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கடந்த 13-ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில் மர்ம நபர்கள், தீ வைத்தனர்.

இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம் (22) ஆகியோர் தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்வந்த் (19), கோகுல் (23) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகிராம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News