அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்
- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி மகத்தான வெற்றி பெற்று தந்தனர்.
- தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல திருமணத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒற்றுமையாக இருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும், சாதாரண தொண்டர் கூட கழகத்தின் உச்ச பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதிமுறையை மாற்றி தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சட்டத்தை திருத்தி உள்ளார். இதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி மகத்தான வெற்றி பெற்று தந்தனர். தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். அதைத்தான் நாங்களும் வழிமொழிகிறோம்.
சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினராக இருப்பவரை புதுப்பிப்பது என்று ஏற்கனவே கழகத்தில் சட்ட விதிகள் உள்ளது. இந்த விதிகள் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள். இந்த விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. பழைய விதிகள் தொடர்ந்தால் நான் போட்டிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.