பரந்தூர் விமான நிலையம் பிரமாண்டமாக 3 டெர்மினல்களுடன் கட்டப்படுகிறது
- கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம்:
சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 5 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 ஆயிரத்து 704 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட இருக்கிறது.
இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக வருவாய்த்துறையில் நிலஎடுப்பு அதிகாரிகள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் மற்றும் கிராமமக்கள் பொன்னேரிக்கரையில் உள்ள நிலஎடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 137 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. புதிய விமாநிலையத்தில் மொத்த திட்ட மதிப்பபான ரூ.32 ஆயிரத்து 704 கோடியில் பயணிகள் வசதிக்காக விமானமுனைய கட்டுமான பணிகள் மட்டும் ரூ.10 ஆயிரத்து 307 கோடி செலவிடப்பட இருக்கிறது.
விமான நிலையம் பிரமாண்டமாக 3 முனையங்களுடன் (டெர்மினல்) கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 4 கட்டமாக நடைபெற இருக்கின்றன.
இதில் முதல்கட்டிட கட்டுமான பணி 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2028-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற கட்டிடங்களின் பணிகள் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும்.
விமான நிலையத்தின் இறுதி கட்டுமான பணி 2046-ம்ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைய உள்ளது.
இதில் முதல் முனையம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 758 சதுர மீட்டர், 2-வது முனையம்-4 லட்சத்து 76 ஆயிரத்து 915 சதுர மீட்டர், 3-வது முனையம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 495 சதுர மீட்டரிலும், சரக்கு முனையமும் அதற்கான வாகனங்கள் நிறுத்தும் இடம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 சதுர மீட்டரிலும் அமைய இருக்கிறது.
மேலும் பரந்தூர் விமான நிலையத்தில் 2 இணையான ஓடுபாதைகள் (4040X45 மீட்டர்) நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் 26.54 சதவீதம் நீர்நிலைகள் உள்ள இடமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறார்கள்.
மேலும் புதிய விமானநிலையத்தை தற்போது உள்ள சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையுடன் இணைக்க புதிதாக 6 வழிச்சாலை அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. முழு வீச்சில் பணிகள் தொடங்குவதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அவை முடிக்கப்பட்டதும் படிப்படியாக பணிகள் தொடங்கப்படும் என்றனர்.