தமிழ்நாடு

10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு- முதற்கட்டமாக இன்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

Published On 2022-10-22 06:42 GMT   |   Update On 2022-10-22 06:59 GMT
  • நாடு முழுவதும் 50 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
  • ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய மந்திரி மற்றும் மாநில, மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை:

இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரெயில்வே, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறை, சுரங்கம், எண்ணெய் கழகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

இந்த துறைகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் முதற் கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 

ரோஜ்கர் மேளா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை வாரணாசியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 50 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய மந்திரி மற்றும் மாநில, மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மோடி தொடங்கி வைத்ததும் அனைத்து இடங்களிலும் பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரிகள் வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய 2 இடங்களில் நடந்தன. சென்னையில் பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்.பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி, ரெயில்வே வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன், பா.ஜனதா தொழில் பிரிவு நிர்வாகிகள் கோவர்தன்,பொன்முரளி மாவட்ட தலைவர்கள் தனசேகரன், கபிலன் மற்றும் சுமதி வெங்கடேஷ், ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, கோட்ட மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு அஞ்சல் துறையில் 250 பேருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News