தமிழ்நாடு

போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து 2 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்

Published On 2023-08-30 10:31 GMT   |   Update On 2023-08-30 10:31 GMT
  • இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை டவுன் மேல ரத வீதியில் கீழ் புறத்தில் டவுன் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இரவு பணியில் இருந்த போலீசார் நள்ளிரவு போலீஸ் நிலைய அறையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீஸ் நிலைய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட செல்போன் திடீரென மாயமானது. அதேபோல் அங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் காணாமல் போன 2 செல்போன்களையும் வேறு அறைகளில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் செல்போன்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 செல்போன்களையும் மர்ம நபர்கள் யாரேனும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தூக்கிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் நிலையம் மற்றும் ரத வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் நேற்று டவுன் ரத வீதியில் வாகன சோதனையில் டவுன் போலீசார் ஈடுபட்டிருந்த போது ஒரு நபர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும், அந்த வாகன ஓட்டி மீது சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து அந்த நபர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து செல்போனை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News