தமிழ்நாடு

முத்துப்பேட்டை அரசகுளம் தெற்கு கரையில் உள்ள ரிஸ்வான் வீட்டில் போலீசார் சோதனை செய்ய சென்றபோது எடுத்தப்படம்.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: முத்துப்பேட்டையில் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை

Published On 2022-10-29 07:17 GMT   |   Update On 2022-10-29 07:17 GMT
  • சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர்.
  • வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

முத்துப்பேட்டை:

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் அந்தந்த மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, அனந்தபத்மநாதன், உதயா, ஹேமலதா மற்றும் போலீசார் அரசகுளம் தெற்கு கரை பகுதியில் உள்ள ரிஸ்வான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட போலீசார் இந்நியாஸ், சாஜித், அசாருதீன் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது.

தொடர்ந்து 4 பேர் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று சோதனை செய்யப்பட்ட ரிஸ்வான் உள்பட 4 பேரின் வீடுகளிலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து ஒரு இயக்கத்துடன் தொடர்புஉள்ளதாக கூறி கைது செய்ததும், பின்னர் அவர்கள் விடுதலை ஆனதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News