திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
- விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
- சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் இருந்து வியாபாரிகள் குருவிகளாக சென்று அங்கிருந்து தங்கத்தை திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேடிக் ஏர் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.35,02 ,800 மதிப்பிலான 556 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த சிம்பத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.