தமிழ்நாடு (Tamil Nadu)

ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும்- சரத்குமார்

Published On 2024-03-15 05:56 GMT   |   Update On 2024-03-15 05:56 GMT
  • தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம்.
  • மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

நாகர்கோவில்:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தி.மு.க. தன் வழக்கமான கூட்டணி கட்சிகளோடு களம் இறங்க, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது.

குறிப்பாக தமிழகம், கேரளாவில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 மாநிலங்களிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதற்காக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயதாரணி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனா தேவ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் உள்ளது. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம் என்றார்.

இதன்பின்னர் பேசிய சரத்குமார், நாட்டை ஆள்வதற்கான நல்ல தலைவர் மோடி. 3-வது முறையாக பிரதமராக அமர உள்ளார். மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News