தமிழகத்தில் அடுத்த மாதம் பிரதமர் மோடி பிரசாரம்
- அன்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்து மோடி பேசுகிறார்.
- கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தாராபுரத்தில் அதிமுக மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) தமிழகம் வருகிறார். திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்'என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
பல்வேறு கட்டங்களாக சட்டமன்ற தொகுதி வாரியாக செல்லும் அண்ணாமலை 83-வது நாளான நேற்று திருவண்ணாமலையில் நிறைவு செய்தார். 84-வது நாளான இன்று கலசபாக்கத்தில் இருந்து யாத்திரையை தொடங்கினார்.
100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை நிறைவில் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் அதில் பிரதமர் மோடி பங்கேற்பதாகவும் இருந்தது. அதற்காக சென்னை புறநகர் பகுதியில் இடங்கள் பார்த்தனர். ஆனால் 5 லட்சம் பேர் கூடும் வகையில் பெரிய இடங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தை திருப்பூரில் நடத்த முடிவு செய்துள்ளார்கள். இதற்காக திருப்பூர் அருகே பெருமாநல்லூர் மற்றும் பல்லடம் அடுத்து உள்ள பொங்கலூர் ஆகிய இடங்களில் இடம் பார்த்துள்ளார்கள். இந்த இரு இடங்களிலும் 200 ஏக்கருக்கு மேல் இட வசதி இருப்பதாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடவும், வாகனங்கள் நிறுத்தவும் வசதி இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து வரும் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு தேர்வு செய்வதை பொறுத்து இந்த இரண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மலர் கொடி, சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் நிர்வாகிகள் கூறும்போது, "பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) திருப்பூர் வருவது உறுதியாகி இருக்கிறது. ஆனால் தேதி முடிவாகவில்லை" என்றனர்.
அடுத்த மாத இறுதியில் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20-ந்தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் வருவார் என்று கூறப்படுகிறது.
அன்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்து மோடி பேசுகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தாராபுரத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையின் பாத யாத்திரை திருப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி நடைபெற இருந்தது. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக நடைபயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அண்ணாமலையை வர வேற்றும் பாத யாத்திரையை வெற்றி பெற செய்யவும் தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது திருப்பூர் பா.ஜ.க.வினரை கவலையில் ஆழ்த்தியது.
இதையடுத்து மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார். ஆனால் சென்னை, தென் மாவட்ட மழை காரணமாக அண்ணாமலை நடை பயணம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் நடைபயணம் எப்போது நடைபெறும் என நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையே கடந்த 19-ந்தேதி கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வருவதாக இருந்த பிரதமர் மோடி , அன்றைய தினம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த திருப்பூர் பா.ஜ.க.வினர் அதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடங்க இருந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், திறப்பு விழா அன்று பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்த நடைபயணமும் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாத யாத்திரை நிறைவு மற்றும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ப.ஜனதாவினர் உற்சாகம் அடைந்து உள்ளார்கள்.