வத்தலக்குண்டுவில் இன்று போலீஸ் நிலைய மாடியில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம்
- போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது திடீரென மாடிப்படியில் ஏறிச் சென்ற கரண்குமார் மாடியில் இருந்து குதித்தார்.
- வாலிபர் போலீஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் கரண்குமார் (வயது 30). இவர் செல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதிக்கு பொருட்கள் வாங்க வந்தார். அப்போது ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்சேட் தலைமையிலான வத்தலக்குண்டு போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றியதால் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் செல்போன் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகப்பட்டு கரண்குமாரை அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது திடீரென மாடிப்படியில் ஏறிச் சென்ற கரண்குமார் மாடியில் இருந்து குதித்தார்.
இதில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடி துடித்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்த போலீசார் கரண்குமாரை உடனடியாக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் படுகாயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கரண்குமாரின் உறவினர்கள் கூறுகையில், செல்போன் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட கரண்குமாரை அழைத்து வந்த போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீசாரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கரண்குமார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க மாட்டார். அப்படியே இருந்தாலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை தண்டனை கொடுத்திருக்கலாம். ஆனால் போலீசார் தாக்கியுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், கரண்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து வந்தோம். இரவு உணவு வாங்கி கொடுத்தோம். காலையில் கழிவறை செல்வதாக கூறிச் சென்ற அவர் திடீரென மாடியில் இருந்து குதித்தார். நாங்கள் அவரை துன்புறுத்தவில்லை என்றனர்.
இந்த நிலையில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்தினார். இரு தரப்பிலும் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
வாலிபர் போலீஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.