திருவொற்றியூரில் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்ற காளை திடீர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
- காளை மாடு திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவில் பகுதியில் சுற்றி வந்து உள்ளது.
- ராஜ கோபுரத்தை பார்த்தபடி நின்ற காளைமாடு சிறிது நேரத்தில் சரிந்து விழுந்து இறந்தது.
திருவொற்றியூர்:
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தாயுடன் சென்ற மாணவியை மாடு ஒன்று முட்டி வீசியது.
இதைத் தொடர்ந்து சென்னை நகரில் சாலையில் சுற்றும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் வீதிகளில் சுற்றி வந்த காளை மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். பின்னர் அதனை பெரம்பூரில் உள்ள கோசாலையில் அடைத்தனர். அந்த காளை மாடு திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவில் பகுதியில் சுற்றி வந்து உள்ளது. இதனால் அதனை கோவில் மாடாக நினைத்து பக்தர்கள் நந்தீஸ்வரர் என்று பெயரிட்டு அழைத்து வந்து இருக்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்களால் காளை மாடு பிடிக்கப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இதற்கிடையே அந்த காளைமாடு கோசாலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மாடு மிகவும் பல வீனம் அடைந்தது. இதுபற்றி அறிந்த பக்தர்கள் சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து நேற்று மாலை காளை மாட்டை மீட்டு வாகனத்தில் கொண்டு வந்து கோவில் குளக்கரை அருகே இறக்கி விட்டனர்.
ராஜ கோபுரத்தை பார்த்தபடி நின்ற காளைமாடு சிறிது நேரத்தில் சரிந்து விழுந்து இறந்தது.
இதனை பார்த்து அங்கிருந்த பக்தர்கள், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இறந்த காளை மாடுக்கு திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிலர் மாட்டின் உடலை பார்த்து கண்கலங்கினர். பக்தர்கள் மாட்டின் உடலுக்கு குங்குமம், சந்தனம் தெளித்து நாலுமாட வீதிகள் வழியாக சிவவாத்தியங்கள் முழங்க இறுதி ஊர்வலம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணி அளவில் மாட்டின் உடல் இந்திரா நகர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆன்மிக முறைப்படி சடங்குகளும் செய்யப்பட்டது.