தமிழ்நாடு

அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் முதலமைச்சர்- தமிழக காங்கிரஸ் பாராட்டு

Published On 2024-09-14 09:05 GMT   |   Update On 2024-09-14 09:05 GMT
  • தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி.
  • தமிழ் கூறும் நல்லுலகமே உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது, போற்றுகிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்காக உள்ளூர் முதலீடுகளை திரட்டுகிற அதேநேரத்தில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்னையில் அந்நிய முதலீட்டாளர்கள் மாநாட்டையும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு சான்பிரான்ஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் பலனாக ரூபாய் 7616 கோடி முதலீடுகளை ஈர்த்து 11,516 நபர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுகிற வகையில் முதலமைச்சரின் முயற்சிகள் வெற்றி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னணி மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் அமெரிக்க பயணத்தின் மூலம் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை போட்டு இன்று தமிழகம் திரும்பும் அவரை 'முதலீடுகளை ஈர்த்த முதல்வரே வருக வருக" என தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வரவேற்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்க பயணத்தின் ஒவ்வொரு நாளையும் கடமை உணர்ச்சியோடு தமிழகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற மிகுந்த ஈடுபாட்டுடன் தனது பணிகளை மனநிறைவோடு செய்து சென்னை திரும்பி இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அவருக்கு பெரும் துணையாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி. தமிழ் கூறும் நல்லுலகமே உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது, போற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News