தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு... திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது... டிடிவி தினகரன்

Published On 2024-07-16 02:56 GMT   |   Update On 2024-07-16 02:56 GMT
  • அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
  • பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Tags:    

Similar News