தமிழ்நாடு

மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை தின்ற இரட்டை குழந்தைகள்- ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2024-09-12 08:40 GMT   |   Update On 2024-09-12 08:40 GMT
  • குழந்தைகள் வார்டில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் மாரி செல்வம். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு சந்திரலிங்கம் (வயது 2), சூரியலிங்கம்(2) ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மாரி செல்வம் இறந்து விட்டார்.

இதனால் செந்தில்நகரில் உள்ள வாடகை வீட்டில் மஞ்சு தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த இரட்டை குழந்தைகள் அங்கிருந்த கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என நினைத்து கடித்து தின்றதாகவும், அதனை அவரது தாயார் மஞ்சு கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு குழந்தைகள் 2 பேரையும் மஞ்சு தூங்க வைத்தபோது, அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு உடனடியாக குழந்தைகள் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்குள்ள குழந்தைகள் வார்டில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் 2 பேரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சு தனது முதல் கணவரை பிரிந்துவிட்டு, 2-வதாக மாரி செல்வத்தை திருமணம் செய்து கொண்டார். அவரும் சமீபத்தில் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது குழந்தைகள் விஷம் சாப்பிட்டதாக கூறப்படுவதால் பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News