தமிழ்நாடு (Tamil Nadu)

துணை முதலமைச்சர் பதவி அல்ல... பொறுப்பு: உதயநிதி ஸ்டாலின் வலைதளத்தில் பதிவு

Published On 2024-09-29 04:23 GMT   |   Update On 2024-09-29 04:23 GMT
  • சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்.
  • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதையடுத்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று மாலையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் முதலமைச்சர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

'துணை முதலமைச்சர்' என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

இவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதையடுத்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில், பல்வேறு இடங்களில் நேற்று இரவு தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

Tags:    

Similar News