உள்ளூர் செய்திகள்
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது.
- சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்ககளாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மேகக் கூட்டங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தினம் என்பதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீர் நிலைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.