தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழகத்தில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2024-09-29 03:08 GMT   |   Update On 2024-09-29 03:08 GMT
  • மதுரை விமான நிலையத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சேலம் விமான நிலையம் செயல்படவில்லை.

சென்னை:

தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 18 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 17 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் மட்டுமே பயணித்து உள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 2,70,013 பேரும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 814 பேரும் பயணித்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 668 பேரும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 பேரும் பயணித்துள்ளனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆயிரத்து 237 பேரும், கடந்த ஆண்டு 16 ஆயிரத்து 526 பேரும் பயணித்துள்ளனர்.

சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் மதுரையில் 1,08,944 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 408 பேர் பயணம் செய்துள்ளனர். சேலம் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு் மாதம் 10,994 பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சேலம் விமான நிலையம் செயல்படவில்லை.

சென்னை விமான நிலையத்தில் ஒட்டுமொத்தமாக பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் பன்னாட்டு விமான நிலையத்தில் மட்டும் பார்க்கும்போது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 4 லட்சத்து 86 ஆயிரத்து 177 பேர் பயணித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 4 லட்சத்து 94 ஆயிரத்து 796 பேர் பயணித்துள்ளனர். இது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னைக்கு வராமல் பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாகவும், ரெயில்களிலும் சென்னை வந்து விடுகின்றனர்" என்றனர்.

Similar News