பற்களை பிடுங்கிய விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் சென்ற 5 பேர் சப்-கலெக்டர் முன்னிலையில் ஆஜர்
- விசாரணையில் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
- மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான 5 வாலிபர்களும் இன்று சப்-கலெக்டர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணையில் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இதில் நேற்று பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மாரியப்பன், செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் ஆகியோர் சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதனை பதிவு செய்துகொண்ட ஆணையம் நாளை மறுநாள் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங்கை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான 5 வாலிபர்களும் இன்று சப்-கலெக்டர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆதரவாக சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாப்பாக்குடி அருகே உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியில், சுமார் 10 அடி உயரத்தில் அவரது படம் பொறித்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
தற்போது இந்த டிஜிட்டல் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் உதவி போலீஸ் சூப்பிரண்டு நலமுடன் வாழ சிறப்பு பூஜைகளை அப்பகுதி மக்கள் செய்தனர்.