மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரெயிலில் உற்சாகமாக பயணித்த சுற்றுலா பயணிகள்
- மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயண சீட்டு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
- ரெயில் வரும் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 11 முறை இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில் பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள், அரியவகை வனவிலங்குகள், பாறைகளால் குடையப்பட்ட மலை ரெயில் குகைகள், அந்தரத்தில் தொங்கும் ரெயில் பாலங்களை கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயண சீட்டு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதையொட்டி ஆண்டுதோறும் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்க வேண்டுமென ரெயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி இந்தாண்டுக்கான சிறப்பு ரெயில்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இன்று முதல் தொடங்கப்பட்டது.
இந்த ரெயில் வரும் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 11 முறை இயக்கப்படுகிறது.
இதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. ரெயிலில் பயணித்த அனைவருக்கும் சாக்லேட், ஜூஸ், 2 பிஸ்கட், கீ ஜெயின் உள்ளிட்ட பரிசுகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் புறப்பட்ட ரெயில் மதியம் 2.25 மணிக்கு சென்றடைந்தது.
இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அவர்கள், செல்லும் வழியில் காடுகளின் இயற்கை அழகையும், வனவிலங்குகளை கண்டு ரசித்தனர்.
இதேபோல் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாளை முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இதில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு ரூ.1,575, 2ஆம் வகுப்பிற்கு ரூ.1,065 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.