மணலி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 92 லாரிகளுக்கு ரூ.1¾ லட்சம் அபராதம்
- லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
பொன்னேரி:
காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம், எல்.என்.டி.துறைமுகம், நிலக்கரி முனையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவொற்றியூர் முதல் மீஞ்சூர்-பொன்னேரி- மணலி சாலைகளை பயன்படுத்தி வருகின்றன.
சரக்குகள் ஏற்றி மற்றும் இறக்கி செல்லும் வாகனங்களை டிரைவர்கள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.
இதையடுத்து சாலையோரங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதன் டிரைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் மற்றும் மீஞ்சூர் போலீசார் பலமுறை அறிவுறுத்தினர். ஆனால் லாரிகள் நிறுத்தப்படுவது தொடர்ந்து நீடித்து வந்தது.இந்த நிலையில் செங்குன்றம் சரக போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைச்சாமி ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில் போலீசார் மணலிசாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர். ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை 92 லாரிகளுக்கு மொத்தம் ரூ.1¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.56 ஆயிரம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது.
தொடர்ந்து லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், பேபி, மணவாளன், நரேஷ், சண்முகராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி கூறும்போது, திருவொற்றியூர்-மணலி-மீஞ்சூர் நெடுஞ்சாலைகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தது. லாரிகளை அதனை நிறுத்தும் வளாகத்தில் நிறுத்த வேண்டும். இதனை மீறும் லாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றார்.