கபடி போட்டியால் பிரச்சினை: நள்ளிரவில் கோஷ்டி மோதலில் மாணவி உள்பட 10 பேர் காயம்
- தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துலுக்கன்குளம் புதியபூக்கள் கபடி குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.
இதில் கலைஞானபுரம் அணியும், சிலுவைபுரம் அணியும் மோதினர். இதில் சிலுவைபுரம் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி அடைந்த அணியை மற்றொரு அணியினர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கலைஞானபுரம் தொண்டியம்மாள் என்பவர் வீட்டின் வழியாக சென்ற போது அதிகமான ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனை தொண்டியம்மாள் என்பவர் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.
தகவல் அறிந்ததும் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் கிராமத்திற்கு சென்று கற்களால் மாறி, மாறி தாக்கி கொண்டனர். அப்போது இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இதில் பொன்னுச்சாமி, பள்ளி மாணவி பிரியதர்ஷினி, மாடசாமி, பரமசிவம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவு துலுக்கன்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இன்று காலை நீடித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.