வெட்டி கொல்லப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த துயரத்தை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
- கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் இன்று மதியம் புகுந்த மர்ம நபர்கள் இருவர், விஏஓ லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த துயரத்தை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். கொல்லப்பட்ட விஏஓ குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.