தமிழ்நாடு (Tamil Nadu)

வேங்கைவயல்: 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை? - கோர்ட்-ன் முடிவு என்ன?

Published On 2024-01-29 07:15 GMT   |   Update On 2024-01-29 07:22 GMT
  • கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.
  • அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் கோரிக்கை வைத்தன.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமானவர்களாக கருதப்பட்ட 31 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை மாதிரிகள், மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர்.

இதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயந்தி 10 பேருக்கு தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி அடுத்த மாதம் 12-ந்தேதி முடிவு செய்யப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News