விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்
- இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
- வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.
இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.
இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைத்து, அறையை பூட்டி சீல் வைத்தார்.
இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் பெற்றது பா.ம.க. பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் டெபாசிட் கிடைக்கும். அந்த வகையில், மொத்தம் பதிவான 1.95 லட்சம் வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கினை பா.ம.க பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாக உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை பணியின் 13வது சுற்றில் திமுக தொடர்ந்து முன்னிலை. இதில், திமுக 83,430 வாக்குகள், பாமக 36,341 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 6,767 வாக்குள் பெற்றுள்ளன.
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
11வது சுற்றில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. திமுக 69,855 வாக்குகள், பாமக 30,421 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 5,566 வாக்குகள் பெற்றுள்ளன.
7வது சுற்று முடிவிலும் திமுக முன்னிலை. அதன்படி, திமுக 44,680 வாக்குகளும், பாமக 17,359 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3936 வாக்குகளும் பெற்றுள்ளன.
விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 25 ஆயிரம் வாக்குள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
5வது, 6வது சுற்று முடிவிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அதன்படி, திமுக 31,151 வாக்குகளும், பாமக 11,481 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2006 வாக்குகளும் பெற்றுள்ளன.