தமிழ்நாடு

ராகுலுடன் நேரடி விவாதத்துக்கு பிரதமர் மோடி தயங்குவது ஏன்?-செல்வபெருந்தகை கேள்வி

Published On 2024-05-13 09:06 GMT   |   Update On 2024-05-13 09:06 GMT
  • தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.
  • இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர்.

இந்த கடிதம் கிடைத்தவுடனே அழைப்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க நரேந்திர மோடி தயாராக இல்லை.

விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, கொரோனா தொற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு, மோடியின் சலுகையினால் அதானி, அம்பானி சொத்து குவிப்பு, ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரம் இழப்பு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக நரேந்திர மோடி திரும்ப ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு கடுகளவு கூட இல்லை என்று அறிவார்ந்த அரசியல் வல்லுநர்களும், பாரபட்சமற்ற தேர்தல் கணிப்பாளர்களும் நாள்தோறும் கருத்துகளை கூறி வருகிறார்கள்.

இதனால் பதற்றமும், அச்சமும் அடைந்த பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்கிற கனவை நாளுக்கு நாள் ராகுல்காந்தி தகர்த்து வருகிறார்.

இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின் வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News