பஸ்சை வழிமறித்த ஒற்றை காட்டு யானை: வனத்துறை ஊழியரையும் விரட்டியதால் பயணிகள் அச்சம்
- சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.
- யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.
வால்பாறையில் இருந்து நேற்று மாலை சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை பென்னட் என்பவர் இயக்கி வந்தார். பயணிகள் 15 பேர் பயணித்தனர்.
சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.
சாலையில் யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான டிரைவர், சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை சில அடி தூரத்தில் நிறுத்தி விட்டார்.
யானை அங்கிருந்து நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
அப்போது பஸ்சில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் பஸ்சை விட்டு கீழே இறங்கி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டார். அவருடன் பயணிகளும் இணைந்து யானையை விரட்ட முயன்றனர்.
ஆனால் யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் ஓடி சென்று பஸ்சில் ஏறி கொண்டார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து சத்தம் எழுப்பினர். இதனால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, கடந்த சில தினங்களாக இங்கு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.