ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை- விதிமுறைகள் தளர்த்தப்படுகிறதா?
- கலைஞர் உரிமைத்திட்டம் தொடங்கப்பட்டு அடுத்த மாதம் 15-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
- தமிழக அரசு, இந்த திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய்நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும். ஒரு ஆண்டிற்கு வீட்டு உபயோக மின்பயன்பாடு 3,600 யூனிட்டிற்குள் இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளால் பல பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. எனவே இந்த நிபந்தனைகளை தளர்த்தி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மவுனமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கலைஞர் உரிமைத்திட்டம் தொடங்கப்பட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனவே இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் வரலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கலாம் என்று திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு, இந்த திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு நிதி வழங்க முடியும். ஆனால் இப்போது அதனைவிட குறைவான பெண்களுக்கு தான் நிதி உதவி வழங்கப்படுகிறது.
எனவே வருமான உச்சவரம்பை உயர்த்தும்பட்சத்தில் கூடுதலாக லட்சகணக்கான பெண்கள் பலன் பெற வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதலில் அரசு பள்ளியில் நிறைவேற்றப்பட்டு தற்போது அரசு உதவிப்பெறும் பள்ளிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கலைஞர் மகளிர் உதவித்தொகையும் அனைவருக்கும் நிச்சயம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஒருபிரிவினர் கூறுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அடுத்த மாதம் 14-ந் தேதிதான் சென்னை திரும்புவார்.
எனவே அடுத்த மாதம் 15-ந் தேதி இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் இதுபற்றி தெரிய வரும். இதற்கிடையில் இந்த திட்டத்தில் புதிதாக சிலரை சேர்க்க விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.