தமிழ்நாடு

கடற்கரையில் கிடந்த ரூ.2 கோடி மதிப்பு 'மெத்தபெட்டமைன்' பறிமுதல்

Published On 2024-10-26 09:27 GMT   |   Update On 2024-10-26 09:27 GMT
  • வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் அந்த மர்மபொருளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.
  • ஆய்வில் அந்த பார்சலில் இருந்தது ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது.

அதிராம்பட்டினம்:

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்மபொருள் கிடப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பட்டுக்கோட்டை கடலோர காவல்குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வேம்பு, ராஜசேகர், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், ராஜாமடம் வி.ஏ.ஓ. முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பார்த்தபோது, கடற்கரை ஓரத்தில் பாலித்தீன் பையில் அந்த மர்மபொருள் கிடந்தது தெரியவந்தது.

பின்னர், வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் அந்த மர்மபொருளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அது போதை பொருள் என்பது தெரியவந்தது. பின்னர், அது எந்த வகையான போதை பொருள்? என்பதை அறிய அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வில் அந்த பார்சலில் இருந்தது 'மெத்தபெட்டமைன்' என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது. அதன் எடை 900 கிராம் என்றும், அதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குபதிவு செய்து போதை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? கடத்தி வந்தவர் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News