எல்லாரும் விரும்பும் திராவிடனாக இருக்க விரும்புகிறேன் - எஸ்வி சேகர்
- இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார்.
- என்னுடைய பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை.
பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் தனது 7 ஆயிரமாவது நாடக விழாவிற்கு தலைமையேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன்பிறகு பேசிய எஸ்.வி. சேகர், இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய ஓட்டு தான் பாஜகவுக்கு தேவை, பாஜகவின் ஓட்டு எனக்கு தேவையில்லை. நான் ஐந்து வருடம் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன். அந்த ஐந்து வருடத்தில் ஒரு ரூபாய் கூட கமிஷன் வாங்காத எம்.எல்.ஏ. என்பதை நான் உறுதி செய்துள்ளேன்."
"அண்ணாமலை இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகாத அரசியல்வாதி. அண்ணாமலை போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இருக்கும் அரசியலில் நான் இருக்க விரும்பவில்லை. எனவே தான் நான் என்னுடைய பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை."
"மோடி அழைத்தார் என்பதற்காக தான் நான் பாஜகவில் இணைந்தேன். என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அண்ணாமலை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார். ஆனால், அவரால் அது முடியவில்லை. தற்போது நானே அந்த கட்சியில் இருந்து விலகி விட்டேன்."
"இனி நான் அரசியலில் ஈடுபட போவதில்லை. எல்லோருக்கும் நண்பனாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக, ஒரு திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.