தேனியில் மீண்டும் மழை- வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.
பூர்வீக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 65 அடி வரை உயர்ந்த நீர் மட்டம் தற்போது 61.12 அடியாக குறைந்துள்ளது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியில் இருந்து 1156 கன அடியாக உயர்ந்துள்ளது.
மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 3699 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை தொடரும் என்ற நம்பிக்கையில் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக உள்ளது. அணைக்கு 534 கன அடி நீர் வருகிற நிலையில் 1105 கனஅடி நீர் திற்கப்படுகிறது. 3301 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும், திறப்பும் 34.29 கன அடி.
ஆண்டிபட்டி 4.2, அரண்மனைபுதூர் 0.6, பெரியகுளம் 12.4, சோத்துப்பாறை 5.2, வைகை அணை 1.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 3.6, பெரியாறு அணை 2.4, தேக்கடி 4.4, சண்முகாநதி அணை 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.