தமிழ்நாடு

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை

Published On 2024-11-15 05:25 GMT   |   Update On 2024-11-15 06:34 GMT
  • பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
  • மழையை பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமீபகாலமாக மாதந்தோறும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கியிருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இரவில் கடற்கரையில் தங்கி நிலா வெளிச்சத்தில் கடற்கரையில் பூஜை செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.

இன்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்க இயலாது.

எனவே இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News