குமரி மாவட்டத்தில் டாக்டர்கள் போராட்டம்
- டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது.
- நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
சென்னையில் அரசு டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டார். டாக்டர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் இன்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் இன்று நடந்தது. குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.