செய்திகள்
கோப்பு படம்

ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்கவில்லை என ஹூவாய் அறிவிப்பு

Published On 2018-06-07 07:08 GMT   |   Update On 2018-06-07 07:08 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக அறிவித்துள்ள நிலையில், பயனர் தகவல்களை சேகரிக்கவுமில்லை, சேமிக்கவுமில்லை என ஹூவாய் அறிவித்துள்ளது.
பீஜிங்:

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரிக்கவும் இல்லை அவற்றை சேமிக்கவும் இல்லை என அறிவித்துள்ளது.

முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை ஹூவாய் உள்பட நான்கு சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதை ஒப்புக் கொண்டிருந்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அறிவிக்கப்பட்ட ஹூவாய் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் செய்தது, ஃபேஸ்புக் மீது மீண்டும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

சீனாவை சேர்ந்த ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம், தனது பயனர் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தமிட்டிருக்கிறது. எனினும் இந்த ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் கட்டுப்பாடுகளுடன் ஃபேஸ்புக் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டன என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்த பிரிவுக்கான துணை தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்திரிக்கை செய்தியில் ஃபேஸ்புக் எவ்வாறு அதன் பயனர்களின் தகவல்களை மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கியது என்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தது.


கோப்பு படம்

ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.

"ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வரெலா தெரிவித்தார்.

ஹூவாய் சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பயனர் சேவையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது என ஹூவாய் தெரிவித்துள்ளது. “மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ஹூவாய் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தளத்தின் சேவைகளை பயனர்களுக்கு மிக எளிமையாக வழங்கப்பட்டன,” என ஹூவாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜோ கெல்லி தெரிவித்துள்ளார். 

“ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை கேகரித்து, சேமிக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News