செய்திகள்

அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை அதிகமாக செறிவூட்ட ஈரான் முடிவு

Published On 2018-06-05 11:04 GMT   |   Update On 2018-06-05 11:04 GMT
அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது.
டெஹ்ரான்:

எண்ணை வளம்மிக்க நாடான ஈரானுக்கும் அமெரிக்கா. பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அணுசக்திக்கு தேவையான யுரேனியம் என்னும் மஞ்சள் நிற தாதுவை செறிவூட்டும் விவகாரம் தீவிரமாக ஆராயப்பட்டது.

இதில் யூரேனியம் செறிவூட்டலை 20 சதவீத அளவுக்கு கீழ் மட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் 5 சதவீத அளவோ அல்லது 20 வீத அளவோ யூரேனியத்தை செறிவூட்டுவது ஈரானிய மக்களுடைய உரிமை என்று ஈரானுக்கான அணு செயற்பாடு தொடர்பான பேச்சாளர் சயீட் ஜலீல் வலியுறுத்தி இருந்தார். அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யூரேனியத்தை 20 சதவீத அளவுக்கு செறிவூட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகிய பின்னர், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா பரிந்துரைத்தது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியபோதும், தொடர்ந்து இதில் நீடிப்பதாக பிறநாடுகள் அறிவித்துள்ளன.


இந்நிலையில், அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள நட்டான்ஸ் பகுதியில் உள்ள அணு உலையில் யூரேனியம் செறிவூட்டும் பணிகளை தொடங்குவதாக சர்வதேச அணு சக்தி முகமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஈரான் அணு சக்தி முகமையின் தலைவர் அலி அக்பர் சாலே இன்று தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பம் சாதகமாக அமைந்தால் நாளை இரவில் இருந்து இந்த அணு உலை செயல்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News