உலகம்

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்: தூக்கி வீசப்பட்ட பணிப்பெண் உள்பட 4 பேருக்கு பலத்த காயம்

Published On 2023-07-14 05:42 GMT   |   Update On 2023-07-14 05:42 GMT
  • மேட்ரிக்ஸ் படத்தில் வருவதுபோல் பணிப்பென் ஒருவர் அந்தரத்தில் பறந்து பின் கீழே விழுந்துள்ளார்
  • ஒரு பயணிக்கு மூக்கில் கடுமையான காயம் ஏற்பட்டதாக அருகில் இருந்தவர் தகவல்

அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவன விமானம் (எண்: 227) ஒன்று, இரு நாட்களுக்கு முன்பாக வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் டர்புலன்ஸ் (turbulence) எனப்படும் காற்றின் வலிமையான, திடீர் ஏற்ற இறக்கத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவத்தில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். விமானத்தில் 179 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர். அவர்களில் 4 பேர் காயமடைந்தனர்.

ஆனால் அந்த விமான நிறுவனம், விமானம் எந்த தடையுமின்றி ஓடுதளத்தில் தரையிறங்கியது எனத் தெரிவித்திருக்கிறது.

காயம்பட்டவர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையளித்தனர். இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான பணிப்பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் காயங்கள் குறித்து விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

அந்த விமானத்தில் பயணித்த லிசா ஸ்பிரிக்ஸ் எனும் பெண்மணி கூறியதாவது:-

இந்த அனுபவம் பயங்கரமானதாக இருந்தது. திரைப்படங்களின் காட்சிபோல் இருந்தது. விமானம் பாதி தூரத்திற்கு மேல் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு வலிமையான ஏற்ற இறக்கமும், 'குலுக்கலும்' ஏற்பட்டது, எங்கள் பக்கத்திலிருந்த பணிப்பெண் 'மேட்ரிக்ஸ்' படத்தில் வருவதுபோல் காற்றில் பறந்து, ஒரு அரை வினாடிக்கு பின் தரையில் விழுந்தார். அவரது கணுக்கால் உடைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு பயணி, "இந்த சம்பவத்தின்போது ஒரு பெண் ரெஸ்ட் ரூம் சென்றிருந்தார். அவர் வெளியே வந்து எனக்கு பின்னால் அமர்ந்தார். அவருடைய வலது புருவத்தில் ஒரு பெரிய காயம் காணப்பட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியது" என கூறினார்.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த நிகழ்வு குறித்து விசாரித்து வருவதாக அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது. ஆனால், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என்று தெரிவித்தது.

Similar News