செய்திகள் (Tamil News)

உலகக்கோப்பையில் 8-வது வரிசையில் அதிக ரன்: ஆஸ்திரேலிய வீரர் சாதனை

Published On 2019-06-07 10:12 GMT   |   Update On 2019-06-07 10:12 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 92 ரன்கள் குவித்ததன் மூலம் கவுல்டர் நைல் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழந்து திணறியபோது 8-வது வரிசையில் களம் இறங்கிய ஆல் ரவுண்டர் நாதன் கவுல்டர் நைல் அதிரடியாக விளையாடினார். அவர் 60 பந்தில் 92 ரன் குவித்தார். இவர் 92 ரன்கள் குவித்ததே ஆஸ்திரேலியா 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

கவுல்டர் நைல் அடித்த 92 ரன்களே உலகக்கோப்பை போட்டிகளில் 8-வது வரிசை வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயின் ஹீத் ஸ்ட்ரீக் 8-வது வரிசையில் 72 ரன் எடுத்து இருந்தார். அந்த சாதனையை நாதன் கவுல்டர் நைல் முறியடித்துள்ளார்.

ஒட்டு மொத்தமாக ஒரு நாள் போட்டிகளில் 8-வது வரிசை வீரர்களில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 95 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த ரன்னை அவர் 2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அடித்தார்.

Similar News