செய்திகள் (Tamil News)

ராணுவ முத்திரை பதித்த கிளவ்ஸ் விவகாரம்- டோனி பிடிவாதம்

Published On 2019-06-07 11:50 GMT   |   Update On 2019-06-07 11:50 GMT
இந்தியாவின் துணை ராணுவ படையின் முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி வேண்டுகோள் விடுத்த நிலையில் டோனி பிடிவாதமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த புதன் கிழமை(ஜூன் 5) இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அப்போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்ப்ர் மகேந்திர சிங் டோனி அணிந்திருந்த கிளவ்ஸில் இந்திய துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும். பாலிடான் முத்திரையை அணிய துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டு டோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. இந்த புகைப்படம் டோனியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம் என  ஐசிசி கோரிக்கை வைத்தது. மேலும் ஐசிசி-யின் விதிப்படி வீரர்கள் மதம்,அரசியல் மற்றும் இராணுவம் போன்ற விஷயங்களை தாங்கள் அணியும் உடைகள் மூலம் வெளிப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் டோனிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. டோனி தொடர்ந்து அந்த கிளவ்சை அணிந்துகொள்ள அனுமதிக்கும்படி ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. டோனி அணிந்திருப்பது துணை ராணுவ முத்திரை அல்ல என்றும், ஐசிசி விதிமுறைகளை அவர் மீறவில்லை என்றும் பிசிசிஐ நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை டோனி தொடர்ந்து பயன் படுத்திவருவதாகவும் தன் நிலைப்பாட்டிலிருந்து அவர் மாறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும் டோனி ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என நெட்டிசன்களும் இந்திய ரசிகர்களும்  தோனிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 9) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Similar News