செய்திகள் (Tamil News)

குடிநீரை வீணாக்கிய விராட் கோலிக்கு அபராதம் விதித்த மாநகராட்சி

Published On 2019-06-07 16:26 GMT   |   Update On 2019-06-07 16:26 GMT
குடிநீரை வீணாக்கியதால் குருகிராம் மாநகராட்சி அதிகாரிகள் விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
குருகிராம்:

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்திய அணி வரும் 9-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் விராட் கோலி.

இந்நிலையில் குருகிராம் மாநகராட்சி அதிகாரிகள் விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

கோலி டெல்லிக்கு அருகே உள்ள குருகிராமில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோலி வீட்டுக்கு வந்த குருகிராம் மாநகராட்சி பறக்கும்படை அதிகாரிகள், அங்கு அவரது வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள், காரை கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். 

இது குறித்து குருகிராம் மாநகராட்சி அதிகாரி யாஷ்பால் யாதவ் கூறியதாவது:-
 
வட மாநிலங்களில் வறட்சி அதிகமாகியுள்ளதால் குடிநீருக்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி குருகிராம் பகுதியும் கடும் வறட்சியில் உள்ளது. எனவே ``குடிநீரை வீணாக்கக் கூடாது. அப்படி வீணாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. 

இந்த எச்சரிக்கையை மீறி குடிநீரைக் கொண்டு கார்களை கோலியின் ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதால் ரூ.500 அபராதம் விதித்துள்ளார்கள். 

இவ்வாறு அவர் கூறினார். 

கோலி ஒரு கார் பிரியர் என்பதால் தனது வீட்டில் அரை டஜன் கார்களை நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News