செய்திகள் (Tamil News)

உலகக்கோப்பை தொடரில் இருந்து தவான் விலகல்: ரிஷப் பந்துக்கு வாய்ப்பு

Published On 2019-06-19 11:39 GMT   |   Update On 2019-06-19 14:51 GMT
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் அணியில் இடம் பெறுகிறார்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பிடித்திருந்தார். கடந்த 9-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா 352 ரன்கள் குவித்ததோடு, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது தவானின் பெருவிரலில் ஹேர்லைன் அளவிற்கு எழும்பு முறிவு ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும் என இந்திய அணியின் டாக்டர் குழு மதிப்பிட்டிருந்தனர். மூன்று வாரம் என்பதால் ஜூலை 1-ந்தேதிக்குள் உடற்தகுதி பெற்று விடுவார். அதுவரை லோகேஷ் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்கிக் கொள்ளலாம் என நிர்வாகம் முடிவு செய்தது.

தவான் காயம் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘தவான் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு மிகவும் ஆவலாக உள்ளார். அவரது காயம் குணமடைந்து விடும். அரையிறுதிக்குள் தயாராகி விடுவார்’’ என்று கூறியிருந்தார்.



இந்நிலையில் அவரது காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ ‘‘தவான் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும்’’ என்று ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் தவானில் 2019 உலகக்கோப்பை கனவு இரண்டு போட்டிகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.

Similar News